Monday, February 22, 2010

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்களா?

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்களா? புதிய இடம், சூழ்நிலை, மனிதர்கள் என எல்லாம் உங்களை மிரள வைக்கிறதா? நிலைமை யை சகஜமாக்கிக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் உங்களை வேலையில் அமர்த்திய மேலதிகாரியைப் பார்த்து நீங்கள் வேலையில் சேர்ந்து விட்ட விவர த்தைத் தெரிவியுங்கள்.

உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகள் என்ன என்பதை சம்பந்தப் பட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களாகக் கூப்பிட்டு வேலையைத் தருவார்கள் என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்வது என்று குழப்பமாக இருந்தால், தயங்காமல் உங்கள் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலதிகாரி முதல் பியூன் வரை அனைவரிடமும் சினேகப் புன்னகையை வீசுங்கள். உங்களை நீங்க ளாகவே அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறு யாரேனும் அங்கு இருந்தால் அவர்களை விட்டு உங்களை அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லுங்கள்.

சக ஊழியர்களின் பெயர், கல்வித் தகுதி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.அனாவசியமாக அவர்களது அந்தரங்க விஷயங்களைக் கிளறாதீர்கள்.

உணவு இடைவேளையின்போது நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடாமல் யாருடனாவது சேர்ந்து சாப்பிடலாம். அதற்கு முன் அவர்களிடம் அனுமதி கேட்டுக் கொள்வது நாகரிகம்.

பெரிய இடத்து சிபாரிசு காரணமாக உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்கலாம். அதற்காக உங்கள் செல்வாக்கைக் காட்டிக் கொள்ளும் படி பேசவோ, சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவோ வேண்டாம்.

வேலை இல்லாவிட்டால் கேட்டு வாங்கிச் செய்யுங்கள். விட்டால் போதும் என்று புத்தகம் படிக்கவோ, அரட்டை அடிக்கவோ, தொலைபேசியில் அரட்டை அடிக்கவோ ஆரம்பித்து விடாதீர்கள்.

கடைநிலை ஊழியராக இருந்தாலும் அவர்களையும் மரியாதையாக நடத்த ஆரம்ப நாள் முதலே கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் படிப்பிற்கும், கிடைத்திருக்கும் வேலைக்கும் துளியும் சம்பந்தமே இல்லாமலிருக்கலாம். எனவே அனுபவஸ்தர்களிடம் உங்கள் வேலைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பியுங்கள்.

இதற்கு முன்பாக நீங்கள் வேலை பார்த்த இடத்தைப் பற்றியோ, அந்த இடத்து ஊழியர்களைப் பற்றியோ, புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள இடத்தில் விமர்சனம் செய்யாதீர்கள்.

மேலதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் வம்பு பேச வேண்டாம். அவர்களாக உங்களிடம் வலிய வந்து பேசினாலும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.

உங்கள் உடையோ, பேச்சோ, நடவடிக்கைகளோ பிறரைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் அநாகரிகமாக இருக்க வேண்டாம். முதல் பார்வையிலேயே உங்களை மரியாதைக்குரிய நபராகக் காட்டிக் கொள்ளும்படி அவை அமையட்டும்.

மேலதிகாரியுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். வேலை செய்யும் விதத்திலோ, சம்பளத்திலோ, வேறு விஷயங்களிலோ உங்களுக்கு ஏற்படும் அதிருப்திகளை உடனுக்குடன் மேலதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

No comments:

Post a Comment